காவிரி வரலாறு

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.

இயற்கை ஆறுகள் நேர்க்கோட்டில் பாய்வதில்லை. காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது.

கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது.

காவிரிக் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்கள் கர்நாட கத்தில் குசால்நகர், மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்.

தமிழகத்தில் காவிரியின் போக்கு

மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.

காவிரி வழக்கு கடந்து வந்த பாதை!

cauvery case judgement1807 – காவிரி நீர் பகிர்வு பிரச்னை முதலில் தொடங்கியது.

1892 – காவிரி நீர் பகிர்வு குறித்து சென்னை – மைசூர் இடையே 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்.

1910 – காவிரிக்கு குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை கட்ட மைசூர் அரசு முடிவு.

1924 – சென்னையும், மைசூரும் அணை கட்டி கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதி.

1956 – மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது காவிரி உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடகாவின் பகுதியானது.

1960 – மேலும் இரண்டு அணைகளை கட்ட கர்நாடகா அரசு திட்டம் – தமிழக அரசு கடும் எதிர்ப்பு.

1986 – காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை.

1990 – வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1991 – மேட்டூர் அணைக்கு 205 டி எம் சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நடுவர் மன்றம். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன.

1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.

1997, 1998 -ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.

2002 – காவிரி நீர் பகிர்வு பிரச்னை மீண்டும் வெடிக்கிறது.

2007 – தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு.

2007 – கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் என தீர்ப்பு.

2007 – தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா ஒரு நாள் உண்ணாவிரதம்.

2007- காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு.

2013- மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.

2014 – உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை கர்நாடக அரசு தாக்கல் செய்தது.

2014 – தமிழக அரசு பதிலை உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.

2016 – கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.

டிஎம்சி அளவு குறைப்பு

முதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பின்னர் அதுவும் இன்றைய தீர்ப்பில் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தமிழக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.

cauvery

10 லட்சம் ஏக்கர் பாசனத்தை இழந்தோம்

தமிழகத்தின் பாசனப்பகுதி தொடர்ச்சியான காவிரி பிரச்சனை காரணமாக 15 லட்சமாக குறைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது. தமிழக உற்பத்தியும் இந்தியாவின் உற்பத்திதான் என்பதை அரசியல் தாண்டி உணர வேண்டும்.

2018- 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Loading