ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுதான் இறுதி எண்ணிக்கையாகும். வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால்கூட, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படமாட்டாது.
ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் ஆயிரத்து 500 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, சில வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 500_க்கும் அதிகமான வாக்காளர் வரக்கூடிய நிலை ஏற்படும்.
இதை, குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட மற்ற வாக்குச்சாவடிகளை வைத்து சரி செய்துவிடுவோம். கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் அடங்கிய பட்டியல், 6_ந்தேதிக்கு மேல் வெளியிடப்படும்.
ஒரு வாக்குச்சாவடியில் ஒரு கண்ட்ரோல் யுனிட் எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும். அதோடு அதிகபட்சம் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்க முடியும். ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால் அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும்.
ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால், வாக்குப்பதிவு எந்திரத்தில் அவர்களின் பெயர், சின்னம் மற்றும் நோட்டா சேர்த்து 64 பட்டன்கள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.
(ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்களுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் அங்கு ஓட்டுச்சீட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்).
தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் கண்ட்ரோல் யுனிட் எந்திரங்களும் 1.25 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன. அதாவது தற்போதய நிலவரப்படி, ஒரு கண்ட்ரோல் யுனிட் எந்திரத்துடன் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க முடியும்.
இதற்கும் அதிகமாக வாக்குப் பதிவு எந்திரம் தேவைப்பட்டால், கேரளா, கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்களிடம் இருந்து பெறப்படும்.
தேர்தல் பணியில் தற்போது 3 லட்சம் ஊழியர்கள் <டுபட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்துவிட்டது. வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் முடிவாகி, அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய ஓட்டுச்சீட்டு அச்சிடப்பட்டதும் இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். 3_ம் கட்ட பயிற்சி, தேர்தலுக்கு முந்தின நாள் தரப்படும்.
தேர்தல் பணிக்கு வராமல் இருப்பதற்கு தகுந்த காரணம் இருந்தால் அது ஏற்கப்படும். மற்றபடி, தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்வதற்கும் வழிவகை உள்ளது.
அ.தி.மு.க. புகாரை தொடர்ந்து, கன்னியாகுமரியில் வசந்த் அன்கோ பேனர்களில் உள்ள வேட்பாளரின் படங்களை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே, தேர்தல் நேரங்களில் முதல்_அமைச்சரை தலைமைச்செயலாளர் சந்தித்து பேசலாம். சமீபத்தில் முதல்_ அமைச்சரை ஷீலா பாலகிருஷ்ணன் சந்தித்து பேசியது எதுபற்றி என்று தெரியவில்லை. யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதய சூழ்நிலையில், அவர்களின் சந்திப்பு சாதாரணமாக இருக்கலாம்.
வைகோவின் சாலை மறியல் போராட்டம் பற்றி கேட்டால், யாருடைய வாகனத்தையும் தேர்தல் கமிஷன் சோதனையிடலாம். தி.மு.க.வின் புகாரை அடுத்து கோவையில் வீட்டுக்கான கிரயப்பத்திரம் வழங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை கலெக்டரிடம் அதுபற்றி விளக்கம் கேட்டுள்ளேன்.
தேர்தல் பணியில் இல்லாத ஊழியர்களை இடமாற்றம் செய்வதில் தவறில்லை. ஆனால் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பெற்ற பிறகே இடமாற்றம் செய்ய முடியும். ஆனால் பதவி உயர்வுகளை அளிக்க முடியாது.
ராமநாதபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அங்குள்ள அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன்.
தேர்தல் தினத்தன்று தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சில தொழிலுக்கு விதிவிலக்கு உள்ளது.
வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை, சாய்தளம் ஆகிய வசதிகள் கண்டிப்பாக அளிக்கப்பட்டு இருக்கும். நிரந்தர சாய்தளம் இல்லாத இடங்களில் தற்காலிகமாக சாய்தளம் அமைத்துத் தரப்படும்.
பொதுவாக தேர்தல் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 24ந் தேதி தேர்தல் நடப்பதால், ஏப்ரல் 22ந்தேதி மாலை 6 மணியில் இருந்து மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கான கடைசி நாள் மாலையில் (22ந்தேதி) கடைகளில் அதிக கூட்டம் கூடி, மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கப்படுகின்றன.
இதை தவிர்ப்பதற்காக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 22ந்தேதி காலையில் இருந்தே அடைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளோம். இதற்கான உத்தரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த உத்தரவு வந்துவிட்டால், 22, 23, 24_ந்தேதி ஆகிய 3 நாட்களும் முழுமையாக கடை அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()

